இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசகரவை உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட பரிந்துரைக்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் சிசிர.ஜே.டி.ஆப்ரூ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஜனாதிபதி இந்தப் பரிந்துரையை மேற்கொண்டிருந்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (08) நடைபெற்ற பாராளுமன்ற பேரவைக் கூட்டத்திலேயே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்;ளஸ் தேவானந்தா மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப்படுவதால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவியில் ஏற்படும் வெற்றிடத்துக்கு நீதிபதி கே.பி.பெர்னாந்து அவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கும் பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்தார்.
அதேநேரம், நீதிபதி கே.பி.பெர்னாந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி சஷி மஹேந்திரனை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கும் அரசியலமைப்புப் பேரவை தனது இணக்கத்தைத் தெரிவித்திருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் ஏற்படும் வெற்றிடத்துக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பி.தெனியாய அவர்களை நியமிப்பதற்கும் இங்கு இணங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.