“மானிட சுபீட்ச வாழ்வுக்கு வழிவகுக்கும் நாளாகவும் தாய்நாட்டைக் கட்டியெழுப்பும் உறுதியும் கொண்ட நாளாகவும் இந்த ரமழான் பெருநாள் அமையட்டும்” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ரமழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ரமழான் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பது,
“உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாதகாலம் நோன்பை நோற்று பிறை கண்டதும்கொண்டாடும் பெருநாள் ரமழான் பெருநாள் அல்லது ஈதுல் பித்ர் இன்று கொண்டாடப்படுகிறது.
ரமழான் நோன்பு காலத்தில் பசித்திருப்பவர்களின் பசியைப் புரிந்து கொள்ளவும், அது பற்றி உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டு வாழ்வதற்கும், மனதைக் கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதற்குமான ஒரு சிறந்த வாய்ப்பு இந்த ரமழான் நோன்பாகும்.
இந்த சிறந்த வாழ்க்கை முறைகளை ஒரு மாதம் மட்டும் அல்லாமல் அன்றாட வாழ்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாகும். அர்ப்பணிப்பு, சுய கட்டுப்பாடு மற்றும் சமத்துவத்திற்கு வழிவகுக்கும் சுய தியாகம் ஆகியவை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சமயக் கல்வியறிவு பெற்ற முஸ்லிம்கள் இலங்கைச் சமூகத்தில் ஏனைய இனங்கள் மற்றும் மதங்களுடன் வரலாற்று ரீதியாக புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
பரஸ்பர நட்பு, மனித நேயம், அன்பு ஆகியவற்றால் அவர்கள் நீண்டகாலமாகப் பேணி வரும் நல்வாழ்வின் செய்தி உன்னதமானது. அனைத்து முஸ்லிம்களுக்கும், பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீதியான அடிப்படையில் உன்னதமான தாய்நாட்டைக் கட்டியெழுப்பும் உறுதியும் கொண்ட நாளாக இந்த ரமழான் பெருநாள் அமையட்டும்! என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.