இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் ஓரளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வர தெரிவித்துள்ளார்.
தொடரும் சீரற்ற காலநிலையால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, கிரியெல்ல, எலபாத்த, அயாகம, நிவித்திகல, எஹெலியகொட, கலவான, பலாங்கொடை, இம்புல்பே, மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, தெஹியோவிட்ட மற்றும் புளத்கொஹபிட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, அம்பகமுவ மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரல மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.