இலங்கை பாராளுமன்றத்தில் இன்று (17) ஊடகவியலாளர்களான பிரகீத் பெரேரா, கசுன் சமரவீர ஆகிய இருவரினதும், தொலைபேசிகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை கண்டித்து இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் இன்று (17) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்த்தனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் இன்று இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்த்தனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“பாராளுமன்றத்தில் இன்று (17) ஆளுங்கட்சிகுழுக் கூட்டம் முடிவடைந்த பிறகு, அங்கிருந்து வெளியேறும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒளிப்பதிவு செய்த, ஊடகவியலாளர்களான பிரகீத் பெரேரா, கசுன் சமரவீர ஆகிய இருவரினதும், தொலைபேசிகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தொலைபேசி ஊடாக, பாராளுமன்ற அறிக்கையிடல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது, பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு கறுப்பு புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகியுள்ள பின்பலத்தில், ஜனநாயகத்தின் பிரதான ஸ்தாபனமாகக் கருதப்படும், பாராளுமன்றத்தில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை சாதாரண விடயமாக கருதிவிடமுடியாது.
இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருப்பதை உறுதிபடுத்தவும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமையை, தவறாக பயன்படுத்தியுள்ள சம்பந்தப்பட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் அவதாமாகவே இருப்போம்” எனவும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்த்தனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது