இலங்கை றக்பி அணியின் முன்னாள் வீரர் வசீம் தாஜுதீனின் 10 ஆவது ஆண்டு ஞாபகர்த்த தினம் கொழும்பு காலிமுகத்திடல் கோட்டாகோகமவில் நேற்று (17) பலரின் பங்குபற்றலுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
வசீம் தாஜுதீனின் நினைவாக கொள்ளுபிட்டியிலிருந்து காலிமுகத் திடல் வரை பேரணியொன்று நடத்தப்பட்டது. தாஜுதீனின் குடும்பத்தினர், நண்பர்கள், அவரின் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் ஞாபகர்த்த தின வைபவத்தில் கலந்துகொண்டனர்.
2012 மே 17 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் வசீம் தாஜுதீன் சடலமாக காணப்பட்டதுடன் ஆரம்பத்தில் அவரின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதிலும் 2015 மே மாதம் அவரின் மரணம் விபத்து அல்ல என நீதிமன்றத்துக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) அறிவித்தனர்.
பின்னர் வசீம் தாஜுதீனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அவர் தாக்குதலால் உயிரிழந்தாகவும் கால்கள், நெஞ்சு, கழுத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.