ஜனாதிபதி முன்னிலையில் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரின் புகைப்படங்களை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிடவில்லை.
இது தொடர்பில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போது,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன் அமைச்சராக நான் இன்று பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது. அவரின் முகத்தை நான் பார்க்கவில்லை. அதனால்தான் நானும், மனுஷ நாணயக்காரவும் படம்கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சராகப் பதவியேற்றோம்.
‘கோ ஹோம் கோட்டா’ என்ற எனது நிலைப்பாட்டில் எள்ளளவேனும் மாற்றம் இல்லை. நான் கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாக்க முற்படவில்லை. அவர் பதவி விலகியே தீர வேண்டும். இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றேன். நாடு ஸ்தீரமடைந்த பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என நம்புகின்றேன்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தம் அமுலாகும் என்ற உறுதிமொழியுடன்தான் பதவி ஏற்றேன். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணை உள்ளிட்ட நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அமைச்சுப் பதவிக்காக எனது கட்சியை நான் காட்டிக்கொடுக்கவில்லை
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தூய்மையான அரசியல் தலைவர். அவரைக் குறைகூற விரும்பவில்லை. ஆனாலும், சவாலை ஏற்க அவர் முன்வரவில்லை. கட்சிக்காகவே நான் அமைச்சுப் பதவியை ஏற்றேன். கட்சியுடனேயே தொடர்ந்தும் பயணிக்க எதிர்பார்க்கின்றேன்.
சவாலை ஏற்று, மூன்று மாதங்கள் அமைச்சராகச் செயற்படுவேன். பஸிலோ வேறு நபர்களோ காலைவாரினால் வெளியேறுவேன்” என்றார்.