காத்தான்குடி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு இலத்திரனியல் மயம்
மட்டக்களப்பு – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ள வெளி நோயாளர் சிகிச்சை பிரிவின் நடவடிக்கைகள் நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவின் சகல நடவடிக்கைகளும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதற்காக ஒவ்வொரு நோயாளருக்கும் தனித்தனியாக அட்டை சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகிறது.
இதற்காக வெளி நோயாளர் சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளியொருவர் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறுவர்கள் அல்லது குழந்தைகளாயின் பிறப்பு அத்தாட்hசி பத்திரம் .அல்லது சிறுவர் ஆரோக்கிய விருத்தி பதிவேடு என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி 231 படைப் பிரிவின் பிரிகேடியர் திலீப் பண்டார. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக சுகாதார தகவல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.நவலோஜிதன் உட்பட காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள்,தாதியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.