crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘இலங்கை வங்குரோத்து நிலைமை உத்தியோகபூர்வமாக பிரகடனம்’

வியாழக்கிழமை 19 ஆம் திகதியில் இருந்து நமது இலங்கை நாடு வங்குரோத்து நாடாக ஆகி விட்டது. அதாவது பெற்ற கடன் தொகையில் ஒரு தவணைக்கான பணத்தை செலுத்த முடியாமல் போனதால்  நாட்டின் வங்குரோத்து நிலைமை உத்தியோகபூர்வமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுவிட்டது ; அந்த நாமம் இப்போது சூட்டப்பட்டு விட்டது. என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை நாட் டைக்கட்டியெழுப்புவதற்கு ஒன்று படவேண்டுமானால், ஏனைய கட்சிகளிலிருக்கும் எம். பிகளை வாங்கும் வேலையைக் கை விடுங்கள். இதனை ஒரு வேண்டு கோளாக முன் வைப்பதோடு, ஜனாதிபதிக்கு எத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்

“எனக்கு முன்னர் உரையாற்றிய இந்தப் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவருமான சமல் ராஜபகஷ கூறியபடியும், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியபடியும் இந்த பாராளுமன்றத்தில் காணப்படும் கலாசாரத்தை மாற்றியாக வேண்டும் என்பதை நாங்கள் ஏற்று கொள்கின்றோம். ஆனால், அவ்வாறே அரசியல் நெறிமுறைகளையும், ஆளும் கட்சி எதிர் கட்சியென்ற பேதங்கள் இன்றி நாம் பின்பற்றியொழுக வேண்டும்.

பிரதமரும் அவரது கல்லூரித் தோழருமான சபை முதல்வரும் அதுபற்றிப் பொறுப்பு கூற வேண்டும்.
அதாவது, அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஏனைய கட்சிகளில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை பறித்தெடுக்கும் நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளுங்கள். அதுதான் அரசியல் ஒழுக்கமாகும்.
முன்னர் அமைச்சர்களின் எண்ணிக்கையை 15 பேராக மட்டுப் படுத்துவதாகவும், அடுத்து 18 பேர் என்றும்,இப்போது வேறுகட்சிகளிலிருந்து எம். பி களை வாங்கி 22 பேர் கொண்ட அமைச்சர் அவையை அமைக்க போவதாகக் கேள்வி படுகின்றேன். அதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் அரசியல் நாகரிகமாகும்.

நாங்கள் நிறைவேற்று சபையை நிறுவி, எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம். ஆனால், ஆளும் கட்சி, எதிர் கட்சிகள் என்பன வெவ்வேறாக இருக்கத்தக்கதாக நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்று படவேண்டுமானால், வேறு கட்சிகளின் எம். பிகளை வாங்கும் வேலையை கை விடுங்கள். இதனை ஒரு வேண்டு கோளாக நான் முன் வைப்பதோடு, இதனை ஜனாதிபதிக்கு எத்தி வைக்குமாறும் நான் சபை முதல்வரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

(எம்.பி. ஒருவர் குறுக்கிட்டு ‘கேம் ‘ என்கிறார் ) கேம் வேண்டாம், காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக் களத்தில் இருந்து எங்களுக்கு கிடைக்கும் செய்தியும் ‘கேம் ‘ வேண்டாம் என்பதுதான் .இந்த விளையாட்டை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றேன்.

ஆனால் , நேற்று யுத்த வெற்றியின் 13 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. அதிலும் கூட ஒரு யுக மாற்றத்தை பாருங்கள். நேற்று காலி முகத்திடலில் எல்லாச் சமூகத்தினரும் கூட்டாக முள்ளிவாய்க்கால் நிகழ்வையும் அனுஷ்டித்தனர். புலிகள் இயக்கத்தில் உயிர் நீத்தவர்களும், உயிர் இழந்த இராணுவத்தினரும் அங்கு ஒன்று போல் நினைவு கூரப்பட்டனர்.

சென்ற ஆண்டு யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நினைவு கூரப்பட்டபோது, இராணுவத்தினர் அங்கு சென்று அதனைத் தடுத்தனர். அதில் ஈடு பட்டவர்களைக் கொண்டு வந்து கூட்டில் அடைத்தனர். ஆனால் ,அந்த நிகழ்வு நேற்று காலிமுகத்திடலில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தின் முன் நடை பெற்றது. இதுதான் யுக மாற்றம். இதுதான் புதிய சமிக்ஞை. இதனை புரிந்து கொண்டு, முன்னோக்கிச் செல்வோம்.

அவ்வாறு செல்வதானால், அரசியல் நெறி முறைகளைப் பேணி கொண்டு இதன் பிறகு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொண்டு ஒன்றுபட்டுச் செயல்படலாம். நிறைவேற்று குழு முறைமைக்கு பாராளுமன்றத்தை கொண்டு செல்ல மீண்டும் நாங்கள் முயற்சிப்போம் அதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்.

அந்த பரிமாண மாற்றத்துக்கு நாங்கள் ஒத்துழைப்போம். இந்த வேளையில் , பரிதாபகரமாக கொலையுண்ட அமர கீர்த்தி அத்துகோரள எம் பிக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துத் கொள்கின்றோம். அவருக்கு ஏற்பட்ட அதே கதி எங்கள் யாருக்கும் ஏற்படக்கூடிய பயங்கரமான நிலையை நோக்கி இந்த கால கட்டம் செல்லலாம்.

அதனை தவிக்க வேண்டுமானால், முன்னர் நான் கூறியவாறே நடவடிக்கை எடுப்போம்.
நேற்றுடன் யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்து போன நிலையில், மார்ட்டின் லூதர் கிங் உடைய வாசகமொன்று நினைவுக்கு வருகின்றது. “போர் ஓய்வதல்ல,நீதி நிலைநாட்டப்படுவதே சமாதானம்” என்றார் ,மார்டின் லூதர் கிங். அத்துடன், “நீங்கள் யுத்தத்தில் வெல்கின்றீர்கள்.ஆனால் , போராட்டத்தில் தோற்றுப் போகின்றீர்கள்” என்றும் ஒரு வாசகம் உண்டு.இதுதான் ராஜபக்ஷ குடும்பத்திற்கு இப்போது நடந்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜ பக்ஷ வின் அலரி மாளிகை உரையில் பிழை இல்லை .ஆனால், அவருக்கு பின்னர் பேசியவர்களின் பேச்சுக்கள்தான் குழப்பத்தைத் தூண்டி விட்டன. அதற்கு அவரது மூத்த சகோதரர் சமல் ராஜ்பக்ஷ சான்று பகிர்வார் என நினைக்கிறேன். அந்த தாக்குதல் நிகழ்வுகள் மிகவும் பாரதூரமானவை. அவற்றைத் தவிர்த்திருக்க முடியும்.தேசபந்து தென்னகோன் என்ற பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மீது குறை சொல்கிறார். அவ்வாறே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்ன கோனை குறை காண்கிறார். பாதுகாப்பு செயலாளரும் இதற்குள் மாட்டி கொண்டிருக்கிறார். இது என்ன அநியாயம்?

இன்று மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மாஜிஸ்திரேட் நீதவான் ஆர்ப்பாட்டத்தைத் நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என குற்றம் சாட்டி பிரதம நீதியரசருக்கு எழுதியுள்ளார். அதற்கு பிரதம நீதியரசர் , நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபரை அறிவுறுத்தியதாக இன்று பத்திரிகை செய்தி ஒன்றில் காணப்படுகின்றது.

செய்வதறியாது இவ்வாறாக இக் காலகட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டிருக்கும் புதிய பரம்பரையினருக்கு பிழையான முன்னுதாரணத்தையே இவர்கள் வழங்குகின்றனர். அதிலிருந்து விடுபட வேண்டும். நேற்று பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பின் பொது 109 கிடைத்து,பின்னர் அது 119ஆகியது .10 வாக்குகள் யாருடையவை?அமைச்சர் பதவிகளை எதிர் பார்த்திருந்தோரின் வாக்குகள்தான் அவையாகும்(

எவ்வளவு பெரும்பான்மை வாக்குகளை எடுத்தும் பயனில்லை. மக்கள் வழங்கிய ஆணை மீறப்பட்டுவிட்டது. பாதை நெடுகிலும் அது பிரதிபலிக்கின்றது. இனி அதனை முன்னோக்கித் திருப்பி விட முடியாது. பாராளுமன்றத்தில் எங்களது பேச்சுகளை அவர்கள் மிகவும் எரிச்சலோடு பார்த்து கொண்டிருக்கின்றனர்.நெறிமுறையைப் பேணுங்கள். உறுப்பினர்களைப் பறித்தெடுத்து வாங்கும் காரியத்தைக் கைவிட்டு விடுங்கள் எனக் கேட்டு உரையை நிறைவு செய்கின்றேன்” என்றார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 60 − = 50

Back to top button
error: