(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் சந்தேக நபர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் வேண்டிக் கொள்கின்றோம் என ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தோப்பூர் ஊடகவியலாளர் முஹம்மது நகீம் முஹமட் புஹாரி தாக்கப்பட்டமையைக் கண்டித்து முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த சனிக்கிழமை மூதூர் பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர் முஹம்மது நகீம் முஹமட் புஹாரி ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதோடு, அக்குழுவினரால் அவரது கையடக்க தொலைபேசி பறிமுதல் செய்ததுடன் பின்னர் அதனை அவரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவரது ஊடக செயற்பாடுகளுக்கும் குந்தகம் ஏற்படுத்தியுள்ளனர்.
ஊடகவியலாளர் புஹாரி, தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விடயம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதை ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதோடு இதனோடு தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் வேண்டிக் கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.