வட மாகாண கல்வி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
வட மாகாண கல்வி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (10) வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
உதவிச் செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், மற்றும் கல்வி, கலை, கலாச்சார மற்றும் விளையாட்டு துறை சார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை, அது தொடர்பில் ஒப்பந்தக்காரர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள், புதிதாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள வேலைகள் போன்ற பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இவ் அமர்வில் கல்வி, கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தாமதமாகிக் கொண்டிருக்கும்
வேலைத்திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகளை யூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் பெற்று அவ்வேலைத்திட்டங்களை முடிவுறுத்தவும் அவ்வாறு இல்லையெனில் வேலைத்திட்டத்தினை முடிவுக்கு கொண்டுவரவும் ஆலோசனை வழங்கினார்.
புதிதாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை எதிர்வரும் மூன்று
வாரங்களுக்குள் ஆரம்பிக்கவும் அதற்குரிய ஒப்பந்தக்காரர்களுடன் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னரே
அவர்களின் பிரச்சனைகளை கலந்தாலோசிப்பதுடன் குறித்த திட்டங்களுக்கான சரியான மூலப்பொருட்கள் உரிய நேரத்தில் கிடைப்பதனை அதற்குரிய தரப்பினர் தனிப்பட்ட கவனம் செலுத்தி கண்காணித்து, கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீடுகளை உச்சளவில் பயன்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.
2022 ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவுகளை இவ் ஆண்டிலேயே சமர்ப்பிக்கவும் குறித்த முன்மொழிவுகள் தொடர்பில் ஏதாவது மாற்றங்கள் இருப்பின் அதனை ஒரு மாத காலத்திற்குள் சீர் செய்து சமர்ப்பிக்கவும் ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.