இலங்கை அரசியலமைபுக்கான 21வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என சட்டமா அதிபர் நேற்று முன்தினம் (26) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தமே இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என சட்டமா அதிபர் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 மற்றும் 22 ஆவது திருத்தங்களின் தனிப்பட்ட தீர்மானங்களில் உள்ள சில விதிகள், அரசியலமைப்புக்கு முரணானவை எனவும் அவை நிறைவேற்றப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை கோரி முன்வைக்கப்பட்ட மனுக்கள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.