அட்டுளுகம பிரதேசத்தில் நேற்று முந்தினம் (27) முற்பகல் காணாமல் போன பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி நேற்று (28) சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் குறித்த மரணம் தொடர்பான விசாரணை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அட்டுளுகம கல்வீட்டுமண்டி அக்ரம் அவர்களின் 9 வயதான மகள் பாத்திமா ஆய்ஷா நேற்று முன்தினம் (27) காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கடைக்கு சென்று பொருள் கொள்வனவு செய்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போன சிறுமியே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
காணாமல் போன சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நில பிரதேசத்திலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சடலமாக மீட்கப்பட்ட 9 வயதான ஆய்ஷா அட்டுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்
இது தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்க தான் உறுதியளிப்பதாக விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 28, 2022
நேற்று முன்தினம் கடைவீதிக்குச் சென்று திரும்பிய சிறுமி CCTV கெமரா செயற்படாத பிரதேசத்தில் எதிர்பாராத நிகழ்வு ஒன்றுக்கு முகம்கொடுக்க நேரிட்டு இருக்கலாம் என விசாரணை நடத்தி வரும் பொலீசார் நம்புகின்றனர்.
பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.