கண்டியில் சொகுசு வாகனத்தில் போதைப் பொருள் வினியோகித்த இருவர் கைது
தங்களது 5 வயது குழந்தையை வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்வதாகக் காட்டி சொகுசு வாகனம் ஒன்றில் போதைப் பொருள் வினியோகத்தில் ஈடுபட்ட இருவரைப் பொலீசார் (09) கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸார், கண்டி லூயிஸ் பீரிஸ் மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மேற்படி ஆணும் பெண்ணும் இரவு வேரளயில் கைது செய்யப்பட்டனர். 37 மற்றும் 29 வயதுடைய இவர்கள் பேராதனை, அம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகப் பொலீசார் தெரிவித்தனர். இவர்கள் கைதாகும் போது 22 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும், 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருனையும் உடன் வைத்திருந்ததாகவும் அவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.
பிரதேசத்தில் போக்குவரத்து தடைகள் நிலவிய போதிலும், தம்பதியினர் ஐந்து வயது குழந்தையை ஒரு துணியால் போர்த்தி நோயாளி போல் காட்டி பொலிஸாரின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்ததாகவும் தெரிய வருகிறது.
இச்சம்பவத்தில் பயன் படுத்தப்பட்ட குழந்தை மேற்படி பெண்ணின் முதல் திருமணத்தில் பிறந்த ஐந்து வயதுக் குழந்தையாகும். இவர்கள் இருவரும் இவ்வாறு நகரின் பல பாகங்களுக்கும் போதைப் பொருள் விநியோகத்திற்காகச் சென்றுள்ளமை பொலீஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் சுமார் 6 இலட்ச ரூபாய் பெறுமதியானது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி பிரதசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷமில் ரத்நாயக்க தலைமையில் கண்டி பொலிஸ் நிலைய போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
.