crossorigin="anonymous">
பொது

கருத்துக்கள் தொடர்பில் சத்தியப்பிரமாணம் பெற தீர்மானம் – கோப் குழு

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) அழைக்கப்படும் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் குழுக் கூட்டம் ஆரம்பிக்கும்போதே சத்திரயப்பிரமாணம் பெற்றுக் கொள்ள குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் கூடிய விசேட கோப் குழுக் கூட்டத்தில் இன்று (21) தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய கோப் குழுவிற்கு வருகைதரும் அதிகாரிகள் குழுவின் கூட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் தாம் தெரிவிக்கும் கருத்துக்கள் பிழையற்றவை என சந்தியப்பிராணம் செய்துகொள்வர்.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்திலேயே இந்த விசேட தீர்மானம் எடுக்கப்பட்டது.

கோப் குழு முன்னிலையில் 2022.06.10ஆம் திகதி ஆஜராகித் தெரிவித்த கருத்தை நீக்கிக் கொள்வதாக இலங்கை மின்சார சபையின் தலைவராக அப்போது கடமையாற்றியிருந்த எம்.எம்.சி.பேர்டினாந்து அவர்கள் அனுப்பிய 2022.06.11ஆம் திகதிய கடிதம் கோப் குழுவின் தலைவரினால் இன்று அங்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் குறிப்பிடுகையில்,

“2022.06.11ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் தலைவரினால் கோப் குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இன்று ஆராயப்பட்டது. கடிதத்துக்கு அமைய முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அதனுடனான இணைப்புக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பேர்டினாந்து அவர்களை மீண்டும் குழு முன்னிலையில் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு கோப் குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன் மூலம் அவருடன் கலந்துரையாடி அதன் மூலம் இந்தக் கடிதத்தின் உள்ளடக்கங்களை மீள் நிர்ணயம் செய்து அவர் கோரியிருந்த அவரது சாட்சியத்தின் ஒரு பகுதியை நீக்குவது தொடர்பான முடிவை எடுக்க முடிவு செய்தோம்” என்றார்.

இதற்கமைய 2022.06.23ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்குக் கூடவுள்ள கோப் குழுக் கூட்டத்துக்கு எம்.எம்.சி. பேர்டினாந்து அவர்களை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் செயலாற்றுகை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிபுணத்துவ அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு விசேட கூட்டத்தை ஜூலை 25ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் கோப் குழுவின் உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, ஜகத் புஷ்பகுமார, அனுர திஸாநாயக்க, (கலாநிதி) ஹர்ஷ.டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, சரத் வீரசேகர, ஜயந்த சமரவீர, எஸ்.எம். மரிக்கார், நளின் பண்டார ஜயமஹா, இந்திக்க அனுருத்த ஹேரத், (கலாநிதி) நாலக கொடஹேவா, இரான் விக்கிரமரத்ன, மதுர விதானகே மற்றும் பிரேம்நாத் சி. தொலவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − 56 =

Back to top button
error: