நாவற்குடா பொது சந்தை கட்டிடத் தொகுதி அடிக்கல் நடும் நிகழ்வு
உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள நாவற்குடா பொது சந்தை கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வானது நேற்று முன்தினம் (22) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நாகராஜா மதிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மாநகர சபையின் உறுப்பினர்களான ம.நிஸ்கானந்தராஜா, த.இராஜேந்திரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு நகரை அண்டிய நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதேசங்களை வர்த்தக ரீதியாக முன்னேற்றும் நோக்கிலும் அப்பிரதேசங்களை சார்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலுமாக சந்தை தொகுதியானது நிர்மாணிக்கப்படவுள்ளது.
சந்தை கட்டிட தொகுதியானது விற்பனை கடைகள், கலாசார மண்டபம் என்பனவற்றினை உள்ளடக்கிய வகையில் இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளது
ஆரம்ப கட்ட பணிகள் உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடன் 31 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சந்தை கட்டிட தொகுதி அடிக்கல் நடும் நிகழ்வில் நாவற்குடா கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாக சபையின் உறுப்பினர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன், அடிக்கல்லினையும் நட்டு வைத்தனர்.