இலங்கைக்கான ஓமான் தூதுவர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
எரிபொருள், எரிவாயு, வலுசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான ஓமான் நாட்டின் தூதுவர் ஜுமா ஹம்தான் ஹஸ்ஸான் அல் மலிக் அல் ஷேஹ்ஹி (Juma Hamdan Hassan Al Malik Al Shehhi) இலங்கை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.
தனது சேவையை முடித்துக் கொண்டு இலங்கையை விட்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான ஓமான் தூதுவர் நேற்று (01) கொழும்பு, கோட்டையிலுள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
ஓமானில் தற்போது சுமார் 25,000 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். பயிற்சித் துறையில் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
சயீத் அல் ரஷ்தி அவர்களின் 08 வருட பதவிக் காலத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கான பரந்த வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.
தான் ஓமான் வெளிவிவகார அமைச்சில் சேவைபுரிய செல்லவிருப்பதாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அங்கிருந்து நடவடிக்கை எடுப்பதாக ரஷ்தி அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.