‘எரிபொருள்’ அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் எரிபொருள் கொள்வனவு, விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளை தெளிவுபடுத்தி அதுதொடர்பான அறிக்கையை ஜூலை 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் நேற்று (04) உத்தரவு பிறப்பித்தது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்திருந்த இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
நீதியரசர்களான விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உயர் நீதிமன்றம்
மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சமையல் எரிவாயு, எரிபொருள், மின்சாரம், பால்மா, மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்பான சலுகைகளை மக்கள் தடையில்லாமல் பெறுவதற்கு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடக் கோரி மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்கள் மற்றும் சுயாதீன நிபுணர்களுடன் உடனடியாக ஆலோசனை நடத்தி கொள்கைகளை வகுப்பதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நாடு தற்போது நீண்ட வரிசையில் நிற்பதாகவும், கடுமையான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டங்கள் மற்றும் பொது அமைதியின்மை போன்றவை ஏற்படுவதாகவும் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர், அமைச்சரவை, மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளர், பல அமைச்சுக்களின் செயலாளர்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சாலிய பீரிஸ், பிரதித் தலைவர் அனுர மெத்தேகொட, முன்னாள் செயலாளர் ரஜீவ் அமரசூரிய, பொருளாளர் ரஜிந்த் பெரேரா மற்றும் உதவிச் செயலாளர் பசிந்து சில்வா ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.