பொலிஸ் ஊரடங்கு சட்டவிரோதமானது – சட்டத்தரணிகள் சங்கம்
இலங்கையில் நேற்றிரவு (08) பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவினை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையானது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது
பொலிஸ் மா அதிபரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்பானது*
மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் அமுலாகும் வகையில் பொலிஸ் மா அதிபரால் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனத்தைத் தெரிவிக்கிறது.
இவ்வாறான ஊரடங்கு ஒன்றை அமுல்படுத்துவதற்கு பொலிஸ் கட்டளைச்சட்டத்தில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை. இவ்வாறான ஊரடங்கானது வெளிப்படையாகவே சட்டவிரோதமானதாக உள்ளதுடன், தமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுகிற நமது நாட்டு மக்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அமைகிறது.
எந்த அதிகாரத்தின் கீழ் இவ்வாறான ஊரடங்கு உத்தரவை பிரகடனம் செய்துள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபரிடம் கேட்க விரும்புகிறது.
இந்த ஊரடங்கு உத்தரவு கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் நோக்கம் கொண்டது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜனநாயத்துக்கு விரோதமானதாக உள்ளதோடு இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும். இது சர்வதேச அளவில் இலங்கையின் நிலைமையை பாதிக்கும்.
தமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், அவ்வாறான உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தம்மிடமுள்ள அனைத்து விதமான அமைதியான வழிமுறைகளையும் பயன்படுத்துமாறும் நாம் இலங்கையின் குடிமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தனது சட்ட விரோதமான உத்தரவை உடனடியாக மீளப்பெறுமாறு நாம் பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக் கொள்கிறோம்.
ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறத் தவறும் பட்சத்தில் அது நாட்டுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,
தலைவர்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
சட்டத்தரணி இசுரு பாலபட்டபெந்தி
செயலாளர்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
There is nothing called 'police curfew' under the Police Ordinance. The declaration of curfew is illegal and a blatant violation of fundamental rights. pic.twitter.com/1w1wFXuXPn
— Saliya Pieris (@saliyapieris) July 8, 2022
அதேவேளை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தரும் பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (09) கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.