இலங்கை – கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வேதேச விமான நிலையத்தில் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. டெர்மினல் முனையத்தின் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நேற்று (11) நள்ளிரவு (12) முதல் மறு அறிவித்தல் வரை சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குகாரணமான முன்னாள் அரசியல்வாதிகள் விஐபி டெர்மினல் ஊடாக நாட்டை விட்டு தப்பித்து வெளியேறுவார்கள் என ஊகிக்கப்படுகின்றது.
இலங்கையில் அரசியல் நெருக்கடி காரணமான முன்னாள் அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் கடமைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்ததாக அச்சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சாவின் சகோதரரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வேதேச விமான நிலையத்தின் ஊடக இன்று (12) அதிகாலை நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்தபோது அங்கிருந்த பயணி ஒருவரினால் கடும் எதிர்ப்பு காரணமாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அவரது ஆவணத்தை பரீட்சிக்க மறுத்தமையினாலும் அவரது பயணம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து இலங்கை ஜனாதிபதி மாளிகை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமளிகை ஆகியவற்றை கைப்பற்றி அங்கு தங்கியிருந்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.