‘இராஜினாமா கடிதம்’ கிடைக்கவில்லை – சபாநாயகர்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'இராஜினாமா கடிதம்' ?

இலங்கையை விட்டு இராணுவ விமானத்தில் வெளியேறியுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இன்று (14) இதுவரை இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் நேற்று 13 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 09 ஆம் திகதி பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்
எனினும் கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இன்று (14) இதுவரை இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என தற்போது இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றும் அவரது பாரியார் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் நேற்று (13) அதிகாலை மாலைதீவு சென்றடைந்தனர்
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டா, மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளார் என இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று (13) செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னர், தனது இராஜினாமா கடித்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பலாம் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாகவும் விடயத்தின் தீவிரத் தன்மை காரணமாக அந்த அதிகாரி தன்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றும் அவரது பாரியார் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் நேற்று (13) அதிகாலை மாலைதீவு சென்றடைந்ததை தொடர்ந்து மாலைதீவிலும் கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்
இலங்கையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து இலங்கை ஜனாதிபதி மாளிகை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமளிகை ஆகியவற்றை கைப்பற்றி அங்கு தங்கியிருந்து உடனடியாக பதவி விலகுமாறு கோரி தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.