மட்டு.மாநகருக்குள் குறுந்தூர பேரூந்து சேவை ஆரம்பம்
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பல சிரமங்களை எதிநோக்குகின்றனர். அவர்களின் நலன் கருதி புதிய உள்ளக நகர போக்குவரத்து சேவை ஒன்று நேற்று (14) மட்டக்களப்பு மாமாங்கச் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் மக்கள் நலன்கருதிய திட்டத்தின் கீழ் ஹப்பி ஹோம் லங்கா பிரைவேட் கம்பனியுடன் இணைந்து சிற்றி ரைட் சேவையை மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் முன்னாள் குருமுதல்வர் அருட்தந்தை ஏ.ஜேசுதாசனின் ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சுகுணன் குணசிங்கம் ஆகியோர் நாடாவை வெட்டி புதிய பஸ் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
மாமாங்கச் சந்தியிலிருந்து ஆரம்பித்து பார் வீதி வழியாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம், அரசடி மணிக்கூட்டுக்கோபுரம், நகர பொலிஸ் நிலையம், காந்திப் பூங்கா, பிரதேச செயலகம், வைத்தியசாலை வீதி, கோவிந்தன் வீதி, இ.போ.ச பஸ் நிலையம், தாண்டவன்வெளிச் சந்தி, ரயில் நிலையம், எல்லை வீதி வழியாக மீண்டும் மாமாங்கச் சந்தியை சென்றடைந்தது.
போக்குவரத்து சேவைக்கு ஒருவழிக் கட்டணமாக பொது மக்களிற்கு ரூபாய் 50 மற்றும் மாணவர்களுக்கு ரூபாய் 40 அறவிடப்படும். குறித்த சேவை புறநகர்ப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாநகர ஆணையாளர் என்.மதிவண்ணன், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.