இலங்கை ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பினை எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நடத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (15) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (15) உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது
அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் 2ஆவது இலக்கத்திற்கமைய ஜனாதிபதி தெரிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.
1981 ஆம் 2ஆவது இலக்க ஜனாதிபதி தெரிவு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியதை தொடர்ந்து மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
அதற்கமைய 5ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்திற்கு உத்தியோகப்பூர்வமாக இன்று அறிவிப்பார்.
நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னர் தீர்மானித்ததற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்
இம்மாதம் எதிர்வரும் 19ஆம் திகதி வேட்பு மனுக்கல் கோரப்பட்டு,எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும்.