தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று
இந்தியா – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்சோர்வு ஏற்பட்டதையடுத்து, இம்மாதம் கடந்த 12-ம் திகதி பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் சென்றார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் மருத்துவர்கள் அறிவுரையின்படி, அதே மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறும்போது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுவான பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார். இன்றோ அல்லது நாளையோ மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்துவிடுவார்” என்றார்.
காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில்,
‘முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்று காரணமாக தேவையான சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை அனைத்தும் நடத்தப்பட்டன. கரோனா தொற்றுக்குரிய அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் உரிய முறைப்படி வழங்கப்பட்டன. தற்போது அவர் குணம் அடைந்து வருகிறார். நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மேலும் சில தினங்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.