இலங்கையில் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்களை ஏற்றுகக்கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றம் இன்று (19) கூடியபோது இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரின் பெயர்கள் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன.
இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனு பின்வருமாறு
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அதனை வழிமொழிந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் அமைச்சர் தினேஸ் குணவர்தணவால் முன்மொழியப்பட்டதுடன் அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14ஆம் திகதி முதல் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்
இலங்கை ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் இன்று ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக கடந்த 16 ஆம் திகதி அறிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்பட்டார்
இலங்கை மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி இருப்பதால் இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தில் நாளை (20) இரகசிய வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.