இலங்கையின் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன் இதன்போது இடைக்கால ஜனாதிபதியாக பாராளுமன்ற உறுப்பினர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்
இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும – 82 வாக்குகள்
பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க வாக்குகள்- 03
இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்
இலங்கையில் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்களை ஏற்றுகக்கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றம் நேற்று (19) கூடியபோது இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர்கள் மேற்கூறப்பட்ட மூவரின் பெயர்கள் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன.
பாராளுமன்றத்தின் மூலம் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய இன்று (20) நடத்தப்படும் வாக்கெடுப்பை ஜனநாயத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்
இலங்கையின் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றதால் பாராளுமன்றம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிந்தன
இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேட்புமனு விபரம்
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அதனை வழிமொழிந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் அமைச்சர் தினேஸ் குணவர்தணவால் முன்மொழியப்பட்டதுடன் அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14ஆம் திகதி முதல் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்
இலங்கை மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி இருப்பதால், இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதனால் புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (20) இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.