‘அரிது அரிது’ மற்றும் ‘பாரச் சிலுவை’ குறும்பட வெளியீடு
முல்லைத்தீவு யோகம்மா கலைக்கூடத்தின் தயாரிப்பில் கு. யோகேஸ்வரனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான ”அரிது அரிது” மற்றும் ”பாரச் சிலுவை” ஆகிய இரு குறும்படங்கள் நேற்று (25) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியீடு செய்யப்பட்டன.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இரு குறும்படங்களின் குறுந்தகடுகளை வெளியிட்டு வைத்தார்.
இதன்போது குறித்த இரு திரைபடங்களில் பணியாற்றிய கலைஞர்கள் கௌரவிப்பு, விருந்தினர்கள் கௌரவிப்பு, திரைப்பட வெளியீடு மற்றும் சிறப்பு பிரதிகள் வழங்கல், ஏற்புரை, சிறப்புரைகள், விமர்சன உரை முதலான நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை சமூகங்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அரிது அரிது குறும்படமும், பல்வேறான வகைகளிலான சுமைகளை விளக்கும் வகையில் பாரச் சிலுவை குறும்படமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கயூரதன், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்க, ஒட்டுசுட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சுதர்சன், ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர், ஊடகவியலாளர் தி.திவாகர், கரைதுறைப்பற்ற பிரதேச சபை உறுப்பினர்கள், திரைப்பட பங்குதாரர்கள் மற்றும் அனுசரனையாளர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.