முகக் கவசம் அணிந்து சுகாதார வழிகாட்டல் பின்பற்ற வேண்டும்
நான்காவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பரிந்துரை
கொவிட்19 தொற்றின் புதிய பிறழ்வு உலகம் முழுதும் வேகமாகப் பரவி வருவதாகவும், இலங்கையில் கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். காலம் தாழ்த்தாது கொவிட் தடுப்பூசியின் நான்காவது டோஸைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொது இடங்களிலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போதும், அதிகளவான மக்கள் கூடும் இடங்களிலும் முகக் கவசங்களை அணிந்து, ஏனைய சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு, ஜூன் மாதம் 31ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி காலாவதியாகாது. தடுப்பூசி நிறுவனம் அதன் காலத்தை அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் அறிவியல் ஆய்வுகளின் மூலம் தடுப்பூசி நிறுவனத்தால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 10 நாட்களில், நாளாந்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. அதனால், 20 வயதுக்கு மேற்பட்ட, மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றவர்கள் நான்காவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த நாட்களில் இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு காணப்படுவதால், பொது இடங்களில் முறையான, தரமான முகக் கவசங்களை அணியுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அண்மையில் தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போதும் முகக் கவசங்களை அணிதல், சவர்க்காரம் இட்டு இரு கைகளையும் கழுவுதல், சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் சன நெரிசலான இடங்களுக்கு அவசியமின்றி செல்லாதிருத்தல் போன்ற முறையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசர தேவையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தடுப்பூசித் திட்டத்தை முழுமைப்படுத்துவது முக்கியம் என்பதை வலியுறுத்திய விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே, 12 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத சிறுவர்கள் மிக விரைவாக அதனைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் அதே போன்று ஒவ்வொரு வைத்தியசாலையிலும் 04 ஆவது டோஸ் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதற்காக மக்களின் வருகை குறைவாகவே காணப்படுகின்றன. தேவை அதிகரித்தால் சுகாதார அமைச்சு அதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த தடுப்பூசிகளுக்கு காலாவதி திகதி குறிப்பிட்டிருந்தது. எவ்வளவு காலம் இந்த தடுப்பூசிகளின் பயனுறுதியை பேண முடியும் என்பதை மீண்டும் மீண்டும் தீர்மானிக்க முடியும் என்பதுடன்,இந்த தடுப்பூசிகளை மேலும் பயன்படுத்தலாம் என்பதை குறித்த உற்பத்தி நிறுவனம், உலக சுகாதார அமைப்புக்கும், தொடர்புடைய பிரிவுகளுக்கும் தெரிவித்துள்ளது. குறித்த பரிந்துரையின் அடிப்படையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தடுப்பூசியை மேலும் 03 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் என சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.