வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டிய மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கள விஜயம்
வெள்ளத்தினால் கடந்த 2022-08-01 ஆம் திகதி பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டிய பிரதேச மக்களை சந்திப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் குழுவுடன் இணைந்து கண்டி மாவட்ட ஜம்இய்யா கிளை, கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் களவிஜயமொன்றை மேற்கொண்டனர்.
குறிப்பிட்ட பகுதிகளின் சேத விபரங்களை சேகரித்தல், துரிதமாகத் தேவைப்படக் கூடிய உதவிகளை இனங்கண்டு அவற்றை பெற்றுக்கொடுக்க ஆவண செய்தல் மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது நீண்ட காலத் தீர்வை பெற்றுக் கொடுத்தல் என்பன இக்களப்பயணத்தின் பிரதான நோக்கங்களாக அமைந்திருந்தன.
சுமார் 610 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலரது வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதோடு சொத்துகள், உடைமைகள் அழிவுக்குட்பட்டுள்ளன என கள அறிக்கை குறிப்பிடுகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளை துப்புரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதுடன் நாவலப்பிட்டிய பிரதேச ஜம்இய்யா கிளை, நாவலப்பிட்டிய மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் நலன் விரும்பிகள் குழுவொன்று நாளாந்த உணவுக்கான ஏற்பாடுகளை செய்து வருவகின்றனர்.
நாவலப்பிட்டி சென்ற குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நாவலப்பிட்டிய ஜம்இய்யா பிரதேச கிளை, அதன் உறுப்பினர்கள், நாவலப்பிட்டிய மஸ்ஜித் நிர்வாகிகள், அங்குள்ள நலன்விரும்பிகள் மற்றும் நலன்புரி சங்கங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து Nawalapitiya Relief Coordination Centre (NRCC) என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
Nawalapitiya Relief Coordination Centre (NRCC) என்ற அமைப்பு தற்போது நாவலப்பிட்டிய நகர ஜூம்மா மஸ்ஜிதை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என வல்லவன் அல்லாஹ்வை பிரார்த்திப்பதாகவும் . மேலும் நல்லுள்ளம் படைத்த தனவந்தர்கள் அவர்களின் கஷ்டங்களை சுமக்க முன்வரவேண்டும் என அன்பாய் வேண்டுகோள் விடுத்துளளது.