“கடந்த சில தினங்களாக பலஸ்தீன் மீது இஸ்ரேலின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறன. காஸா பிராந்தியத்தை இலக்குவைத்து இஸ்ரேல் நடத்தும் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கணிசமான அளவு சிறுவர்களும் பெண்களும் உள்ளடக்கம். பலஸ்தீனர்களின் இரத்த வாடையில் ஊறித்திளைத்த இஸ்ரேலின் இரத்த வெறி அப்பட்டமாக புலப்படுகிறது” என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் (18) தெரிவித்தார்
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்
“பொதுமக்கள் குடியிருப்புக்கள், சர்வதேச ஊடகங்களின் தலைமையகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்பவற்றின் மீது மேற்கொள்ளப்படும் மூர்க்கத்தனமான தாக்குதல்கள் இஸ்ரேலின் பாசிச முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனை மறைக்க பலியை ஹமாஸ் மீது போட முயன்றாலும் இஸ்ரேலின் சாயம் வெளுத்து விட்டது என்பதே யதார்த்தம்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் “இரு தனி நாட்டு திட்டம்” மூலம் பலஸ்தீன், இஸ்ரேல் ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் சுதந்திரம், ஜனநாயகம், பாதுகாப்பு, செழிப்பு உட்பட்ட சம உரிமைகளை வழங்க செயற்படுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் தற்போதைய அவரது நகர்வுகளை பார்க்கின்ற பொழுது ஜோ பைடன் முதல் எட்டிலேயே சறுக்கி விழுந்து விட்டாரா என எண்ணத் தோன்றுகிறது.
காசா பிராந்தியத்தை திறந்தவெளி சிறைச்சாலையாக ஆக்கி பாலஸ்தீனத்தின் பூர்விகக் குடிகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டத்தை கண்டும் மௌனித்திருக்கும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன அதற்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் போர் குற்றங்களுக்கு சரியான நீதி வழங்கப்பட வேண்டும். பலஸ்தீன மக்களின் சுதந்திரமும், வாழ்வுரிமையும் பாதுகாக்கப் படுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். இஸ்ரேலின் இந்த பலஸ்தீன் மீதான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக எனது கண்டனங்களை வன்மையாக பதிவு செய்ய விரும்புகிறேன்” எனவும் குறிப்பிட்டார்