இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (22) இடம்பெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
01. அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணைய (Cyber) பாதுகாப்புக் கொள்கை
அரச நிறுவனங்கள் டிஜிட்டல் முறைமையில் செயற்படுகின்ற நிலைமை அதிகமாகக் காணப்பட்டாலும், தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான போதியளவு கவனம் செலுத்தாமை, காலங்கடந்த தொழிநுட்பப் பயன்பாடு மற்றும் அரச துறையில் இணையப் பாதுகாப்பு முகாமைத்துவத்திற்குத் தேவையான திறன்வாய்ந்த பணியாளர்களின் பற்றாக்குறை போன்றவற்றால் அந்நிறுவனங்களின் தகவல் மற்றும் தகவல் தொழிநுட்ப தொகுதிகள் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளது.\
இந்நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கணணி அவசரப் பதிலளிப்புக் குழுவால் (SLCERT), இலங்கையில் 2019-2023 தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தகவல் பாதுகாப்பு தரநிர்ணயங்களுக்கு அமைவாக அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ‘பகிரங்க அதிகாரசபைகள்’ என வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இக்கொள்கையை நடைமுறைப்படுத்தல் கட்டாயமானதாகும். அதற்கமைய, அரச நிறுவனங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள தகவல் மற்றும் இணையப் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்
நீண்டகாலமாக அரச வருமானம் குறைந்து, அரச செலவினங்கள் அதிகரித்துள்ளமையால் ஏற்பட்டுள்ள அரச நிதிச் சமநிலையற்றதன்மை தற்போது தீவிரமான பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ளது. அதனுடன் தொடர்புடைய பொருளாதார சவால்களின் மத்தியில் 2023-2025 இடைக்கால வரவு செலவுச் சட்டகத்தில் 2023 ஆண்டுக்கான வரவு செலவைத் திட்டத்தைத் தயாரிக்கும் போது மிகவும் புத்திகூர்மையுடனும் மற்றும் மூலோபாய ரீதியான அணுகுமுறையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிச் சூழல் மேலும் மோசமடையாமல் தடுத்தல் மற்றும் எதிர்கால நிலைபேற்றுத் தன்மைக்கு அடித்தளமிடும் வகையில் தயாரித்தல் வேண்டும்.
அதற்கமைய, 2023-2025 இடைக்கால வரவு செலவுச் சட்டகத்தில் அடைவதற்கு எதிர்பார்க்கப்படும் அரச நிதி இலக்குகளின் அடிப்படையில் தற்போது மொத்த தேசிய உற்பத்தியின் 9% வீதமாகவுள்ள அரச வருமானத்தை 11.3% வீதமாக அதிகரித்தல், 18.9% வீதமாகவுள்ள அரச செலவினங்களை 18.1% வீதமாகக் குறைத்தல், ஆரம்ப வரவு செலவு மீதி மறை 4% வீதத்திலிருந்து மறை 1% வீதத்திற்கு குறைத்தல் மற்றும் வரவு செலவு இடைவெளி மறை 9.9% வீதத்திலிருந்து 6.8% வீதமாகக் குறைத்தல் போன்ற இலக்குகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவு மூலம் பூர்த்தி செய்து கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு பூச்சிய அடிப்படையிலான (Zero – Based Budgeting) அடிப்படையில் தயாரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீட்டைத் தயாரிப்பதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. விவசாயத் துறையில் ஒத்துழைப்புக்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையொப்பமிடல்
விவசாயத் துறையில் பங்களிப்பு தொடர்பாக ஓமான் சுல்தான் அரசின் விவசாய, கடல் வளங்கள் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு மற்றும் எமது நாட்டின் விவசாய அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டத்தை திருத்தம் செய்தல்
சர்வதேச விமானப் போக்குவரத்திற்காக வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லலுக்கான குறித்த சில விதிகளை ஒன்றாக்குவதற்கான (Montreal) சமவாயத்தின் கீழ் சர்வதேச வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லலுக்கான வரையறைகள் 2021.01.22 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த பொறுப்பு வரையறைகள் இலங்கையில் வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் தொழிற்றுறையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், உள்ளூர் வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் தொழிற்றுறையை குறித்த பொறுப்பு வரையறைகளிலிருந்து விடுவிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டத்தில் ஏற்புடைய பொறுப்பு வரையறைகளை மீளாய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டத்தின் 2ஆம், 5ஆம் மற்றும் 8 ஆம் உறுப்புரைகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டத்தின் குறித்த ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. மரக்கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கருமங்களை சமகாலத் தேவைகளுக்கமைய திருத்தம் செய்தல்
1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரச கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் 1968.04.04 திகதி அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் மூலம் அரச மரக்கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டுள்ளது. அக்கூட்டுத்தாபனத்தின் கருமங்கள் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச மரக்கூட்டுக் கூட்டுத்தாபனத்தின் விடயத்தலைப்பு சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. புனர்வாழ்வு செயலக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
போதைப்பொருளில் தங்கி வாழ்பவர்கள், யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகள், வன்முறைமிக்க தீவிரவாதக் குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் வேறு ஏற்புடைய நபர்களுக்கான சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல், பின்னரான பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய கருமங்களை ஆற்றுவதற்காக புனர்வாழ்வு செயலகமொன்றை நிறுவுவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021.04.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் முறையொன்றை நிறுவுதல்
க.பொ.த (உயர்தர) பரீட்சை மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு 02 வருடங்கள் கல்விசார் பயிற்சிகளிலும் ஒரு வருடம் உள்ளகப் பயிற்சியும் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஒரு வருடகால உள்ளகப் பயிற்சிக்காக கல்வியியல் கல்லூரிகளில் தங்குமிடம் வழங்கப்படாததுடன், தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை ஆசிரிய பயிலுநர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போது ஆசிரிய பயிலுநர் ஒருவருக்கு கல்விசார் பயிற்சியின் போது செலுத்தப்படும் 5,000/- ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை. அதனால், ஆசிரிய பயிலுநர்களுக்கு தற்போது கிடைக்கின்ற கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் மேலும் 10,000/- நிதி வசதியை சலுகை வட்டி அடிப்படையில் அரச வங்கியொன்றினூடாகப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடை வழங்கல்
2023 ஆம் ஆண்டுக்கான சீருடைத்துணி 2022 ஆம் ஆண்டு பாடசாலை இறுதித் தவணைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் சீனக் குடியரசுக்கு விண்ணப்பிக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைத்துணித் தேவையின் ஒருபகுதியை இலவசமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சீனக் குடியரசால் வழங்கப்படும் சீருடைத்துணிக்கு மேலதிகமான தேவையை உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. இலங்கை புகையிரத திணைக்களத்தின் அத்தியாவசிய சிவில் வேலைகள் மற்றும் சமிக்ஞை தொகுதி வேலைகளுக்குரிய ஒப்பந்தங்களை நேரடியாக அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கல்
இலங்கை புகையிரத திணைக்களத்தின் அத்தியாவசிய சிவில் வேலைகள் மற்றும் சமிக்ஞை தொகுதி வேலைகளுக்குத் தேவையான உழைப்புப் படையணியில் பற்றாக்குறை காணப்படுவதால் புகையிரத சேவைகளை சரியான வகையில் மேற்கொண்டு செல்வதில் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக, அவ்வாறான கட்டுமானங்கள் தொடர்பாக சிறந்த அனுபவங்களுடன் கூடிய 600 இற்கும் அதிகமான உழைப்புப் படையணியுடன் தற்போது இயங்கி வருகின்ற அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் ரூபாய் தொகையை விடவும் அதிகரிக்காத ஒப்பந்தங்களை நேரடி விலைமனுக் கோரல் பொறிமுறையைக் கையாண்டு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் திருகோணமலை ஒலிபரப்பு நிலையம் அமைந்துள்ள காணியில் சூரிய மின்கல கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
குச்சவெளிப் பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிற்றலை ஒலிபரப்பு நிலையத்தை நடாத்திச் செல்கின்ற காணியில் சூரிய மின்கல மின்னுற்பத்திக் கருத்திட்டமொன்றை மேற்கொள்வதற்காக 2022.01.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கான கருத்திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதுடன், 07 முன்மொழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவால் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான முதலீட்டாளராக 3W Power Management Ltd நிறுவனம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த முதலீட்டாளர்களுடன் இணைந்து முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 2022/2023 பெரும்போகச் செய்கைக்கான யூரியா பெறுகைக் கோரல்
2022 யூன்; மாதம் 07 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய 2022/23 பெரும்போகச் செய்கைக்கான யூரியா உரக் கொள்வனவுக்காக, குறித்த பெறுகைக் கோரல் செயன்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெறுகைக் கோரல் மூலம் 150,000 மெற்றிக்தொன் யூரியா உரப் பெறுகைக்குத் திட்டமிடப்பட்டிருப்பினும், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விலைமனுதாரரால் 12,500 மெற்றிக்தொன் யூரியா உரத்தை மாத்திரமே விநியோகிப்பதற்கு விலைமனுக் கோரல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த யூரியா உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கும், மேலும் 125,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தைத் துரிதமாகக் கொள்வனவு செய்வதற்காக இலத்திரனியல் (e-procurement) பொறிமுறையைக் கையாண்டு மீண்டும் விலைமனுக் கோரலைப் பெறுவதற்கும் விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்
சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக இலங்கை சுற்றுலா மற்றும் காணி அமைச்சு மற்றும் ஓமான் அரசின் மரபுரிமைகள் மற்றும் கலாச்சார அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.