ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டார்
ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறையிலிருந்து இன்று (26) வெளியேறினார்.
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டார்
வெலிக்கடை சிறையிலிருந்து வெளியேறிய ரஞ்சன் ராமநாயக்கவை வரவேற்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர் மனுஷ நாணயக்கார, எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரது ஆதாரவாளர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்
2017 ஓகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.