2021/2022 பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பம் கோரல்
2021/2022 கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இம்மாதம் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2021/2022ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற (30) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2021/2022 ஆம் கல்வி ஆண்டு, 42,519 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க இடமுண்டு என்றும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்
‘இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கு செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். அதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும்
மாணவர் கையேடு செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி புத்தகசாலைகளுக்கு வழங்கப்படும். இதற்காக தெரிவு செய்யப்பட்ட விற்பனை முகவர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மும்மொழிகளிலும் பத்திரிகைகளில் வெளியிடப்பட உள்ளன.
பல்கலைக்கழக அனுமதிக்கு ஒன்லைனில் Online விண்ணப்பிக்கலாம், அதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், 1919 என்ற அரசாங்க தகவல் மையத்தைத் தொடர்பு கொண்டு அதற்கான விளக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக அந்த அதிகாரிகளுக்கு பயிற்சிளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஒன்லைனில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பும் முன் எங்கள் இணையதளத்தில் உள்ள அறிவுறுத்தல் கானொளியை பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம், ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், விண்ணப்பத்தை பிழையின்றி நிரப்ப முடியும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல் மையம் இந்த நாட்களில் வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும், ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் 011 26 95 301 மற்றும் 011 26 95 302 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இந்த நிலையத்தை தொடர்பு கொள்ள முடியும்.
இந்த ஆண்டு மாணவர்களுக்காக பல புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நிதியியல் பொருளாதார பாடநெறி (ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகம்), ஆங்கில மொழி மற்றும் மொழியியல் தொடர்பான பாடநெறி (ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்), வங்கியல் மற்றும் காப்புறுதி தொடர்பான பாடநெறி (வவுனியா பல்கலைக்கழகம்), ஆக்கப்பூர்வமான இசை மற்றும் தொழில்நுட்ப பாடநெறி (ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகம்) ஆகியவை அடங்கும். மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞானம் தொடர்பான புதிய பீடம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.’ என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார்.