மின்சாரம், எரிபொருள், சுகாதாரம் அத்தியாவசிய சேவைகள்
மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சேவைகள் இன்று (03) முதல் அமுலாகும் வகையில், அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் 2295/45 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய
1. மின்சாரம் வழங்கல் தொடர்பிலான சகல சேவைகள்
2. பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருட்கள் வழங்கல் அல்லது விநியோகம்
3. வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு பாதுகாப்பு, போசாக்கூட்டல், சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள், அல்லது தொழில் பங்களிப்பு. ஆகியன அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
1979ஆம் ஆண்டு 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவிற்கமைய, ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய,
மேலே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை வழங்குவதில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றினால் வழங்கப்படும் சேவைகள் வழமையான பொதுமக்கள் வாழ்வைக் கொண்டு நடாத்துவதற்கு இன்றியமையாததென மற்றும் சொல்லப்பட்ட சேவைக்கு இடையூறாகக் கூடுமென்பதை அல்லது தடையாகக் கூடுமென்பதைக் கருத்திற் கொண்டு எந்தவொரு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றின் மூலம் வழங்கப்படும் பின்வரும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள சேவைகள் மேற்போந்த பிரிவின் பணிகளுக்காக அத்தியாவசிய சேவைகள் என இக்கட்டளையின் மூலம் பிரகடனப்படுத்துகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளன