உலக சிறுவர் மந்தபோஷணை தொடர்பான தரப்படுத்தலுக்கு அமைய ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இன்மை காரணமாக இலங்கை 6வது இடத்தில் காணப்படுவதாகவும், தெற்காசியாவில் அதிக மந்தபோஷணையை எதிர்நோக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் காணப்படுவதாகவும் அண்மையில் யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார் மத்தியில் மந்தபோஷணை” என்ற தலைப்பில் சபை ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்திருப்பதுடன், உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இதற்குக் காரணமாகவுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், இதனால் ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளே அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் மத்தியில் உயரத்துக்கு ஏற்ற எடை இன்மை மற்றும் வயதுக்கு ஏற்ற உயரம் இன்மை போன்ற நிலைமை அதிகம் காணப்படுவது கடந்த காலத்தில் அறிக்கையிடப்பட்டிருப்பதாகவும், இந்த நிலைமை எதிர்காலத்தில் தொடர்ந்தும் காணப்பட்டால் சுகாதார நிலைமை மற்றும் கல்வி நடவடிக்கைகள் என்பன பாதிப்படையும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இதைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் முறையான திட்டமொன்றைக் கொண்டுவந்து, அதனை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் சபை ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய அவர் ஆலோசனை தெரிவித்தார்.