மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அனுமதி
மோட்டார் வாகனச் சட்டத்தின் (203 ஆம் அத்தியாயம்) கீழான ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 126 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 மார்ச் 31 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் இணக்கம் அண்மையில் (16) வழங்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன தலைமையில் நெடுஞ்சாலைகள் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூடிய போதே இந்த இணக்கம் வழங்கப்பட்டது.
இந்த ஒழுங்குவிதிகள் மூலம் வாகனச் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலம் தற்காலிகமாக நீடிக்கப்படும். அதற்கமைய எதிர்வரும் தினங்களில் இந்த ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளன.
இதேவேளை, உள்நாட்டு மோட்டார் வாகன உற்பத்தியை விருத்தி செய்வது தொடர்பில் இந்தக் குழுக் கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். மேலும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்கள் பற்றிய அறிக்கையொன்றை எதிர்வரும் குழுக் கூட்டத்தில் வழங்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ திலும் அமுனுகம, கௌரவ சாந்த பண்டார, கௌரவ கனக ஹேரத், கௌரவ சிறிபால கம்லத், கௌரவ கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.எம். மரிக்கார், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ சுமித் உடுகும்புற, கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி மற்றும் கௌரவ யதாமினி குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.