பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி
இலங்கை பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு அண்மையில் (27) கொழும்பு ஆனந்தக் கல்லூரியில் நடைபெற்றது.
கொழும்பு ஆனந்த கல்லூரியின் உயர்தர மாணவர்களின் அரசியல் விஞ்ஞானம் குறித்த பாடத்தின் திறன்களை மேலும் வலுப்படுத்துவது இந்நிகழ்வின் நோக்கமாகும் என்பதுடன், இதில் இலங்கைப் பாராளுமன்றத்தின் உயர் மட்ட அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கொழும்பு ஆனந்த கல்லூரியின் அரசியல் விஞ்ஞான மன்றத்தின் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அப்பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கை பாராளுமன்றத்தின் பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர ஜனநாயகம் மற்றும் பாராளுமன்றம் பற்றி சுருக்கமான அணுகுமுறையின் ஊடாக தனது பாராளுமன்ற அனுபவத்தைப் பாடசாலை சமூகத்துடன் பகிர்ந்துகொண்டார்.
பாராளுமன்ற குழுக்கள் மற்றும் எதிர்கால பிரஜைகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே ஜயதில மாணவர்களுக்கு விரிவுரை நடத்தியிருந்ததுடன், சட்டவாக்க நடைமுறைகள் அறிமுகம் என்ற தலைப்பில் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவினால் கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தொளிவுபடுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அம்சமாக இது அமைந்திருந்தது.
பாராளுமன்றத்தின் நடைமுறைகள் குறித்த உங்களின் திறனை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய அல்லது ஒன்லைன் ஊடாக நடத்த வேண்டுமாயின் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவைத் தொடர்புகொள்வதன் மூலம் அவற்றை ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.