கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழி தின போட்டி
கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழி தின போட்டியின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று (02) இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திருமதி.குலேந்திரகுமார் சுஜாதாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து இறைவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து, தமிழ் மொழி தின கீதம் என்பன இசைக்கப்பட்டதையடுத்து மாணவர்களின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து தமிழ் மொழி தினப் போட்டிகள் நடுவர்களுக்கான அறிவுறுத்தலின் பின்னர் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் மொழி தின போட்டியில் கோட்ட மட்டங்களில் வெற்றிபெற்று, மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டதுடன், இதில் நாட்டுக்கூத்தி (வடமோடி, தென்மோடி), இலக்கிய நாடகம், பேச்சு, கவிதை பாவோதல் மற்றும் தனி நடன போட்டிகள் என்பன இடம்பெற்றன.
இம் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டும் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் எதிர்வரும் நவெம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளின் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்விப்பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், நடுவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.