crossorigin="anonymous">
பொது

‘தாபன விதிக்கோவை மூலம் அடிப்படை உரிமைகளை நசுக்க முடியாது’

'பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான சுற்றறிக்கையை உடனடியாக இரத்து செய்'

அரசாங்க அதிகாரிகள் சமூக ஊடகங்கள்மூலம் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக 27-09-2022 ஆம் திகதி அன்று பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட 04/2022 சுற்றறிக்கையை கடுமையாக எதிர்க்கும் சுதந்திர ஊடக இயக்கம், குறித்த சுற்றறிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை கண்டுகொள்ளாமல் பிடிவாத குணத்துடன் செயற்படுவது தொடர்பில் அராசாங்கம் மீது தமது கடும் அதிருப்தியை (2022.10.04) தெரிவித்துக்கொள்கின்றது.

அரச ஊழியர்களுக்கு அமுலாகும் தாபனக்கோவையானது மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் அடிப்படை மனித உரிமையாகவும், இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகவும் அங்கீகரிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து வெளிப்படுத்தும் உரிமையை மீறுவதாக உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை வழக்கு எண். SCFR 76/2012 இன் தீர்ப்பில் இது தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு, ஊழல்களை வெளிக்கொணரும் உரிமை அதன் கீழ் பாதுகாக்கப்படும் பின்னணியில், காலாவதியான தாபனக்கோவை வரம்புகளைத் தொடர்வது, மக்கள் வென்றுள்ள உரிமைகளை மீளப்பெறும் செயற்பாடாகும்.
அண்மையில், இவ்வாறு ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தாபனக்கோவையை மேற்கோள் காட்டி சுகாதார செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டபோது, புதிய சூழலுக்கு ஏற்றவாறு தாபனக்கோவையை திருத்தியமைக்க வேண்டுமெனச் சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து மனித உரிமைகளும் நிலைப்பதற்கு அடிப்படை நிபந்தனையான பேச்சு மற்றும் கருத்துரிமையை பாதுகாத்தல் மற்றும் அதன் பரப்பை விரிவாக்குவதற்கு முன்னின்று வாதிடும் சுதந்திர ஊடக இயக்கம், குறித்த உரிமைகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

இது ஊடகவியலாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உட்பட சாதாரண மக்களுக்கும் பொருந்தும். அரச ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதில் சில கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக வேண்டிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதை நாம் மறுக்கவில்லை. இருப்பினும், அத்தகைய வரம்புகளை நிர்ணயிப்பது காலாவதியான சட்டங்களை மறுசீரமைப்பதன் மூலம் அல்ல, மாறாகத் தற்போது நடைமுறையில் காணப்படும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் முற்போக்கான அணுகுமுறையால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

விசேடமாகப் பாரிய மக்கள் எழுச்சியின் மூலம் ஒட்டுமொத்த அமைப்பு முறையைப் புரட்சிகரமான மாற்றத்தைக் கோரிய ஒரு சமூகத்திற்கு எதிராக இவ்வாறான மொட்டையான ஆயுதங்களைத் தூக்குவது கண்டிக்கப்பட வேண்டிய நிலையாகும்.

எனவே, இந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறும் தாபனக்கோவை உள்ளிட்ட காலாவதியான சட்டங்களைத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசை வலியுறுத்திக்கொள்கின்றோம்.–சுதந்திர ஊடக இயக்கம்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − 27 =

Back to top button
error: