மாற்றுத்திறனாளிகள் தொழில் துறைசார் தேசியமட்ட போட்டிக்கு
சுவாபிமானி சுயசக்தி அமைப்புகளை மதிப்பீடு செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளை தொழில் துறைசார் தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்வதற்கான நிகழ்வு நேற்று (05) யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2022.06.29 அன்று நடைபெற்ற மாவட்ட மட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 09 போட்டியாளர்களை சுவாபிமானி சுயசக்தி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை zoom தொழில்நுட்பம் ஊடாக இதன் போது நடைபெற்றது.
இந்த போட்டியாளர்களுள் 04 பேர் நல்லூர் பிரதேச செயலக பிரிவில் இருந்தும், மருதங்கேணி, கோப்பாய், தென்மராட்சி, யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் இருந்து தலா ஒரு போட்டியாளர்களுமாக 06 பிரதேச செயலகங்களில் இருந்து 09 பேர் தெரிவாகியுள்ளனர்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இணையவழி நிகழ்நிலை ஊடாக சமூக சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்