கோப் குழுவின் புதிய தலைவராக ரஞ்சித் பண்டார தெரிவு
அரசாங்க பொது முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடருக்கான முதலாவது கோப் குழுக் கூட்டம் நேற்று (06) கூடியபோதே இந்தத் தெரிவு இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டாரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்த்தன அதனை வழிமொழிந்தார்.
கோப் குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரான் விக்ரமரத்னவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.எம்.மரிக்கார் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமார விஜேரத்ன இதனை வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டாராவுக்கு 15 வாக்குகளும், கௌரவ இரான் விக்ரமரத்னவுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
கோப் குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அக்குழுவின் தலைவர், அரசாங்க நிறுவனங்களை எவ்வாறு நவீனமயப்படுத்தலாம் என்பதை ஆராய்ந்து பார்ப்பது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் பிரதான செயற்பாடு என்றார். குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் ஆராயப்பட்ட நிலக்கரி விலைக்கோரல் குறித்து கோப் குழுவில் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும், நிதி அமைச்சின் கீழ் உள்ள அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து அரசாங்க நிறுவனங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லொகான் ரத்வத்த, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, கௌரவ ஜகத் புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக ரணவக, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, கௌரவ நிமல் லான்சா, கௌரவ எஸ்.எம்.எம்.முஷாரப், கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ரோஹினி குமார விஜேரத்ன, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ ரஜிகா விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.