உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படும் – ஜனாதிபதி ரணில்
உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும்
இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள அரசியல் முறை மையினை நிராகரிப்பதால், அவர்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதன்படி, அடுத்த தேர்தலுக்கு முன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள்) உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என்றும் “மக்கள் சபை” வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (09) தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரம் தவிசாளர் என்ற ஒற்றைத் தலைவருக்குச் செல்வதற்குப் பதிலாக தவிசாளர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியலில் ஊழல் தலைதூக்க முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறையே என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உடனடியாக விருப்பு வாக்கு முறையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு முறை ஒன்றை (ஒற்றை மற்றும் விகிதாசார முறை) கொண்ட தேர்தல் முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும் தேர்தலில் செலவிடப்படும் நிதிக்கும் தேர்தல் சட்டம் மூலம் வரையறைகள் இடப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சிரேஷ்ட உப தவிசாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த மற்றும் சட்டத்தரணிகள், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.