கோப் குழு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை பெற தீர்மானம்
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல கணக்காய்வாளர் நாயகம் மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் திணைக்களத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான கோப் குழு அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விசேடமாக நிறுவனங்களைக் குழுவின் முன் அழைப்பது, உப குழுக்களை அமைப்பது மற்றும் பின்னாய்வுகளை மேற்கொள்வது போன்றவற்றுக்கு கணக்காய்வாளர் நாயகத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும், இணைத்துக் கொள்ள வேண்டிய நிறுவனங்களை இணைத்துக் கொள்வது, சிறியளவு பங்குகளைக் கொண்ட 17 நிறுவனங்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் திணைக்களத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக திறைசேரியின் பிரதிநிதிகள் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாகப் பணியாற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர் சபைக் கூட்டங்களில் பங்கேற்கும்போது அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்குபற்றும் கூட்டங்களின்போது கலந்துரையாடப்படும் பிரதான விடயங்கள் தொடர்பில் சிறிய குறிப்பொன்றின் மூலம் பணிப்பாளர் நாயகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டியதன் பொறுப்பு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டது.
கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படும் நிறுவனங்கள் குறித்து முடிவெடுக்கும்போது கணக்காய்வாளர் நாயகத்தின் பணிப்புரையின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனம் தற்பொழுது முகங்கொடுக்கும் சூழ்நிலைகள், உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், பின்னூட்டம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்களை ஆராய்ந்த பின்னர் குறித்த நிறுவனங்ளை அழைக்க வேண்டும் தோன்றினால் அவற்றை அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய ஐந்து நிறுவனங்களை கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் குழு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை போன்ற நிறுவனங்களை எதிர்காலத்தில் கோப் குழுவில் அழைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சகல அரசாங்க பொறுப்பு முயற்சி நிறுவனங்களையும் அழைப்பதில் குழுவுக்குக் காணப்படும் அசௌகரியங்கள் காரணமாக உபகுழுக்கள் சிலவற்றை அமைப்பதற்கும் இங்கு முடிவெடுக்கப்பட்டது. கணக்காய்வாளர் நாயகம் தயாரித்துள்ள நிறுவனங்களை அழைக்கும் பட்டியல் மற்றும் நிறுவனங்களை அழைப்பதை இரத்துச் செய்யும் பட்டியல் ஆகியவற்றை ஆராய்ந்து குறித்த உபகுழுக்களுக்கு முன்னிலையில் அழைக்கும் நிறுவனங்கள் குறித்து அடுத்த குழு அமர்வில் தீர்மானிக்கப்படவுள்ளது.
சகல அரசாங்க நிறுவனங்களிலும் உள்ளகக் கணக்காய்வைப் பலப்படுத்த கணக்காய்வாளர் நாயகத்தினால் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
கோப் குழுவின் அதிகாரங்களை விஸ்தரிப்பதற்கான நிலையியற் கட்டளையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குழுவில் பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பான கோரிக்கையை கௌரவ சபாநாயகரிடம் அனுப்பிவைப்பதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் கொள்முதல் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறுப்பும் கணக்காய்வாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் கலந்துரையாடல்களுக்கு உள்ளான நிலக்கரி கேள்விப்பத்திரம் கோரல் தொடர்பில் சகல தரப்பினரையும் அழைத்து விசாரிப்பதற்கும் குழுவின் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டது.
கோப் குழுவின் முன்னாள் தலைவர் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் அவரை குழு முன்னிலையில் அழைத்து விளக்கம் கோருவது பற்றி அழுத்துமூலம் அறிவிப்பதற்கும் குழுவின் உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்தனர்.
அத்துடன், கொள்வனவு வழிகாட்டல் கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், எஸ் பவர் எம்பிலிபிட்டிய திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, கௌரவ டி.வி. சானக, கௌரவ ஜனக வக்கம்புர பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுரகுமார திஸாநாயக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.