இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) ஏற்பாட்டில், CFLI மற்றும் MYTHOS LABS இன் அனுசரணையில், “தவறான தகவல்களுக்கு எதிராவோம்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக துறைசார்ந்தோருக்கான பயிற்சி நேற்று (18) செவ்வாய்க்கிழமை கொழும்பு சின்னமன் லேக்சைட் (Cinnamon Lakeside) ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கையின் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவது மற்றும் அதன் தாக்கம், தவறான தகவல்களை அடையாளம் கண்டு அதற்கு பதிலளிப்பது, தவறான தகவல்களைப் அறிக்கையிடுதல் மற்றும் தவறான தகவல் வலையமைப்புகளுக்கு முகங்கொடுத்து இணைய பாதுகாப்பை அதிகரிப்பது, தவறான தகவல்களுக்கு எதிராக ஒன்றிணைத்து செயற்படுவது குறித்து இந்த செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.
தமிழ் மற்றும் சிங்கள மொழியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் ஆண் மற்றும் பெண் ஊடகவியலாளர்கள், ஊடக துறைசார் மாணவர்கள் உட்பட சுமார் 60 பேர் கலந்துகொண்டனர்.
நடைமுறைச் செயற்பாடுகளுடன் கூடிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பயிற்றுவிப்பாளராக ஊடக பயிற்றுவிப்பாளர் மொஹமட் பைரூஸ் தமிழ் மொழியிலும் மற்றும் கசுன் குமாரகே சிங்கள மொழியிலும் விரிவுரையுடன் பயிற்சிகளையும் வழங்கினர்
நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் வெலெரி ஓவெல்லட் (Valerie Ouellette), இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குமார் லோபஸ், மைதோஸ் லேப் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியங் மதூர் மற்றும் நிகழ்ச்சி முகாமையாளர் பைசா செய்ட் ஆகியோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது
இலங்கையில் தவறான தகவல்கள் பரவி வரும் இக்காலத்தில் இது ஒரு அவதானத்திற்குரிய தலைப்பாக இருப்பதனால் பல ஊடகவியலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இத்திட்டத்தில் இணைந்தனர். சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தமது தொழில் அனுபவத்தையும் சேர்த்து செயலமர்வை செழுமைப்படுத்தியதுடன், அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுடன் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுற்றது
பயிற்சி நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் கனேடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், இலங்கை பத்திரிகை ஸ்தாபன அதிகாரிகள், மைதோஸ் லேப் அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களுடன் குழுவாக படம் எடுத்துக்கொண்டனர்.