சார்க் அமைப்பின் கொழும்பு சாசனம் மற்றும் 16வது மாநாட்டுக்கு அமைய 8,000 மெட்ரிக் டொன் விசேட அரிசிக் கையிருப்பைப் பேணுதல் மற்றும் 2008/8/27 ஆம் திகதியிலான அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய நாட்டில் காணப்படும் உணவுத் திணைக்கள களஞ்சிய சாலைகளில் 100,000 மெட்ரிக் டொன் பாதுகாப்பான அரிசிக் கையிருப்பை பேணுவதற்கு முடியாமல் போனமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.
வேயாங்கொடை களஞ்சிய தொகுதியிலுள்ள 1, 7, 8, 9,10 மற்றும் 13 ஆம் இலக்க 6 களஞ்சியங்களை விஞ்ஞான ரீதியாகவும் இயற்கை ரீதியாகவும் நவீனமயப்படுத்தியுள்ள நிலையில் குறிப்பிட்ட இருப்பைப் பேணுவதற்குத் தவறியமை தொடர்பில் குழு உறுப்பினர்கள் இதன்போது கேள்வியெழுப்பினர். இந்தக் களஞ்சியங்களை நவீனமயப்படுத்த 2012 முதல் 2019 வரை 292 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹஷீம் தலைமையில் நேற்றுமுன்தினம் (20) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் பாதுகாப்பு அரிசி இருப்பை பேணுதல் மற்றும் களஞ்சியசாலைகளைப் பயன்படுத்துவதன் செயல்திறன் பற்றிய கணக்காய்வு அறிக்கையை விசாரணை செய்வதற்கு இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமது திணைக்களம் திறைசேரியிடமிருந்து தேவையான ஏற்பாடுகளைக் கோரியிருந்த போதிலும் அவை கிடைக்காததனால் உரிய இருப்பைப் பேணுவதற்கு முடியாமல் போனதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அண்ணளவாக 100,000 மெட்ரிக் டொன் அரிசி இருப்பைப் பேணுவதற்கு ஒரு வருடத்துக்கு 22 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இங்கு புலப்பட்டது.
250,000 மெட்ரிக் டொன் களஞ்சியப்படுத்தக்கூடிய களஞ்சியத் தொகுதியொன்றை விஞ்ஞான ரீதியாக நவீனமயப்படுத்தினாலும் அதன் கொள்ளளவின் அதிக தொகைக்கு சமனான தொகையை களஞ்சியப்படுத்த இதுவரை முடியவில்லை என்பதுடன், இதுவரை கிடைக்கப்பெறுகின்ற உலக உணவுத் திட்டத்தின் உதவிகள் மற்றும் ஏனைய நாடுகளினால் கிடைக்கப்பெறும் அரிசி உதவிகளை களஞ்சியப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
நாடு பூராகவும் காணப்படும் அரசாங்க உணவுக் களஞ்சியத் தொகுதிகள் தொடர்பில் உரிய ஆய்வொன்றை மேற்கொண்டு தரவுகளை சேகரிக்குமாறும் களஞ்சியங்களின் உரிமை தொடர்பான உரிய தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு குழு அறிவித்தது.
அதேபோன்று, எந்த நிறுவனம் நாட்டில் குறிப்பிட்ட அரிசி இருப்பை பேணவேண்டும் என்பது தொடர்பில் கண்டறிந்து சரியான வழிப்புணர்வொன்றை மேற்கொள்ளுமாறு குழுவின் தலைவர் வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.
உணவு ஆணையாளர் திணைக்களத்துக்குச் சொந்தமான களஞ்சியத் தொகுதிகளை ஏனைய அரச அல்லது தனியார் நிறுவங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கும் போது இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் மாதாந்த வாடகையை அறவிடுவதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் உரிய ஒப்பந்தங்களை தேவையான வகையில் தயாரிக்குமாறு இதன்போது குழு அறிவுறுத்தல் வழங்கியது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ டயனா கமகே, கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி. சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சரத் வீரசேகர, கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, கௌரவ அஷோக் அபேசிங்க, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கௌரவ டீ. வீரசிங்க, கௌரவ இசுறு தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டதுடன் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கமத்தொழில் அமைச்சின் செயலாளர், உணவு ஆணையாளர் திணைக்களம், விவசாயத் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், சதொச நிறுவனம், நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் திறைசேரியை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.