crossorigin="anonymous">
பொது

கனேடிய வர்த்தக சமூகம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம்

இலங்கையில் தற்பொழுது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க கனேடிய வர்த்தக சமூகத்தினர் இணக்கம் தெரிவித்தனர்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய வர்த்தகத் தலைவர்கள் குழு பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவிர்த்தனை நேற்று (03) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இந்த இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.

இலங்கையுடனான நட்புறவை மேம்படுத்துவதற்குத் தாம் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்த இக்குழுவினர், இலங்கையிலுள்ள இளம் தொழில்முனைவோர் தத்தமது நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கான ஆதரவை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான ஒருங்கிணைப்பு செயலகமொன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவிருப்பதாகவும், இதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் வருகை தந்திருந்த கனேடிய வர்த்தக சமூகத்தினருக்கு சபாநாயகர் தெரிவித்தார். இதன் ஊடாக பொருளாதார அபிவிருத்திக்கு சம்பந்தப்பட்ட துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், இரு தரப்பினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன், இந்நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் உருவாக்கவுள்ள புதிய வேலைத்திட்டங்களில் கனேடிய வர்த்தக சமூகத்தினரை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் இளைஞர்களின் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதற்காக நிலையியற் கட்டகைளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த வியாபார சமூகத்துடன் வருகை தந்திருந்த கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் அவர்களுடன் சினேகபூர்வமாகக் கலந்துரையாடிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, பாராளுமன்றத்தின் அமைவிடம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்துச் சுட்டிக்காட்டினார்.

இந்த வர்த்தகக் குழுவினர் பாராளுமன்ற சபா மாண்டபத்தையும் பார்வையிட்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 20 = 26

Back to top button
error: