இலங்கை கொழும்பு துறைமுக கடற்பரப்பில் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவரான அர்ஜுன ஹெட்டியாரச்சி நீதி மன்றத்தில் ஆஜார் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவர் இன்றைய (16) தினம் தனது சட்டத்தரணியின் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்டார்.
இதன்போது ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கம் மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்
இந்த கப்பல் சம்பவம் தொடர்பிலான நீதிமன்ற உத்தரவுகளை கவனத்திற்கொள்ளாது எவராவது செயற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம நேற்று அறிவித்தார்.
கப்பல் நிறுவனத்தின் உள்நாட்டு பிரதிநிதி தமது நிறுவனத்தில் உள்ள மின்னஞ்சல் பதிவுகளின் பிரதியை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்காமை தொடர்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் கொழும்பு மேலதிக நீதவான் நீமன்றில் முன்வைத்த விளக்கத்தை கவனத்திற்கொண்டே நீதவான் இவ்வாறு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.