சிறுவர் தொடர்பான சம்பவங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்துவதை தடுப்பதற்கு சட்டம்
சிறுவர்கள் தொடர்பான சம்பவங்களை ஊடகங்களில் அறிக்கையிடும் போது சிறுவர்களை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான சட்டங்களை தயாரிப்பது தொடர்பில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டுகை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டுகை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (10) கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மில்லனிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்களில் சிறுவர்களை வெளிப்படுத்துவது தொடர்பில் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கமைய சட்டமொன்றை தயாரிப்பதன் அவசியம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
சிறுவர் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னர் கொண்டுவருவது தொடர்பில் ஊடகங்களில் அறிக்கையிடும் போது ஏனைய குற்றவாளிகளை விட விசேட முறையொன்றை பயன்படுத்த வேண்டும் எனவும், இல்லையாயின் அது சிறுவர்களின் மன நலத்திற்கும் அவர்களது எதிர்காலத்துக்கும் பாதகமான வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.
ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தை வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இங்கு வலியுறுத்தப்பட்டது. அதற்கமைய ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்துக்கு ஒதுக்கப்பட்ட அறையொன்றையும் அதில் பணியாற்றுவதற்கு நான்கு பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு இதுவரை அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர்களான அனுப பஸ்குவல், கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ புத்திக்க பதிரன, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ சம்பத் அத்துகோரல, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ ரஜிகா விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே, கௌரவ முதிதா பிரசாந்தி டி சொய்சா, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க மற்றும் கௌரவ காமினி வலேபொட ஆகியோர் கலந்துகொண்டனர்.