‘வெளிநாடு வாழ் இலங்கையர் பணியகம்’ ஸ்தாபிக்க நடவடிக்கை
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கைக்கு உதவுவதற்காக ‘வெளிநாடு வாழ் இலங்கையர் பணியகம்’ என்ற பெயரில் நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின் கீழியங்கும் இந்த பணியகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் நேரடியாக இந்த பணியகத்துடன் சம்பந்தப்பட்டு இலங்கையின் பணிகளுக்கு உதவ முடியும்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் புலம்பெயர் இலங்கை மக்களின் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளது.
இதன்படி, இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களின் தடைகளை அரசாங்கம் அண்மையில் நீக்கியது.
புலம்பெயர் அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இலங்கையர் தொடர்பான இந்த பணியகம் திறக்கப்பட உள்ளது.