ரூ.600 மில்லியன் E P F கொடுப்பனவு குறித்து கோப் குழுவில் கேள்வி
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 2019ஆம் ஆண்டு நிதியாண்டு மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் பேராசிரியர்ரஞ்சித் பண்டார அவர்களின் தலைமையில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) நேற்று (25) கூடியது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அரச தனியார் கூட்டாண்மையின் கீழ் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ ரத்னாயக மற்றும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சதுரங்க உடவத்த உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோப் குழு கீழ்வரும் பரிந்துரைகளை முன்வைத்தது.
1) 2016ஆம் ஆண்டு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இலாபமீட்டச் செய்வதற்காக கூட்டு முயற்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்தது. இருந்தபோதும் இது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது கோப் குழுவின் அவதானமாக இருந்தது. கூடிய விரையில் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோப் குழு அறிவுறுத்தியது.
2) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பிரதான நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கூட்டுத்திட்டமொன்றை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் கோப் குழு சுட்டிக்காட்டியது.
3) இந்தக் கூட்டுத்திட்டத்தை செயற்படுத்த நடைமுறைச்சாத்தியமான மதிப்பீடொன்றைத் தயாரித்து அதன் அண்ணளவான திட்டத்தை 2023 ஜனவரி 03ஆம் திகதிக்கு முன்னர் கோப் குழுவில் சமர்ப்பித்தல்.
4) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கடனாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் கடனை வசூலிக்கும் முறை குறித்து 3 வாரங்களுக்குள் கோப் குழுவிற்கு அறிவித்தல்.
5) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன பணியாளர்களின் 600 மில்லியன் ரூபா வரையிலான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியைச் செலுத்துதல் தொடர்பில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் கோப் குழுவுக்கு அறிக்கையிடவும். இவ்வாறு காலதாமதப் படுத்தியமை பிழையான முன்னுதாரணமாகும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
6) 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதியறிக்கைகள் கணக்காய்வாளர் நாயகத்திற்கு தாமதமாக சமர்பிக்கப்பட்டமை பற்றிய யதார்த்தமான மதிப்பீட்டை 2 வாரங்களுக்குள் கோப் குழுவிற்கு அறிவித்தல்.
7) கடற்றொயழில் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மறுசீரமைப்பதற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்த திட்டத்தை முன்வைத்தல்.
1957ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு அமைய 1965ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபத்தின் செயற்பாடுகள் அதன் நோக்கங்களிலிருந்து வேறுபட்டிருப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியது.
மீன்பிடி நடவடிக்கைகள், மீன் பதப்படுத்துதல், மீன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய பரந்த செயல்பாடுகள் குறித்து சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும் இன்று மீன் வியாபாரம் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதும் இங்கு புலப்பட்டது.
மீன் வியாபாரத்தை மாத்திரம் முன்னெடுப்பதற்கு அரசாங்கக் கூட்டுத்தாபனத்துக்கான தேவை இல்லையென்றும், கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை விஸ்தரித்து இலாபமீட்டும் நிலைககுக் கொண்டுவர வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய சட்டத்தைத் திருத்துவதற்கு அல்லது புதிய நோக்கங்களுடன் கூடிய புதிய திட்டத்துடன் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் வைத்தியசாலை உணவுகளுக்காக உள்ளூர் மீன் இனங்களை வழங்குவதற்கான தேவை இருக்கின்றபோதும், அதற்குப் பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட தளபத் மீனை வழங்குவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது. இது தொடர்பில் ஆராய்ந்து இறக்குமதி செய்த மீன்களை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்குப் பதிலாக உள்நாட்டு மீன் வகைகளை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்குமாறும் கோப் குழுவின் தலைவர், கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்குப் பணிப்புரை விடுத்தார்.
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தற்போதைய தலைவர் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டிய கோப் குழுவின் தலைவர், இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் நோக்கில் கூட்டுத்தாபனத்தை ஜனவரி மூன்றாம் வாரத்தில் மீண்டும் அழைக்கவிருப்பதாகவும் கூறினார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கம்புர, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி, கௌரவ (மேஜர்) சுதர்சன் தெனிபிட்டிய, கௌரவ பிரேம்நாத் சி. டொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்