‘அமைச்சின் அனுமதியின்றி வைத்தியர்களுக்கு விசா வழங்க வேண்டாம்’
வெளிநாடு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
இலங்கை சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாமல் வைத்தியர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு அறிவிக்கவும்,வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையத்தில் அவர்களின் விடுமுறை தொடர்பான பத்திரங்களை ஆராயுமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் நேற்று (29) தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஒருசில மருத்துவர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றி வெளிநாடு சென்றுள்ளார்கள். சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள ஆலோசனை அறிவுறுத்தல்களுக்கு முரணாக வெளிநாடு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சேவையில் ஈடுப்படுவதற்கும் தடையேற்படுத்தப்படும்.
ஒரு டாக்டர் வெளிநாடு செல்லும் போது அவரது சேவை வெற்றிடம் முழுமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டல் ஆலோசனையை சுகாதாரத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் 300 டாக்டர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்